ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் சமாதி தினம்

இன்று கார்த்திகைப் பௌர்ணமி

ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் சமாதி தினம்.

எனது குரு நாதர் அவரை 1957 இல் அம்பத்தூரில் சந்தித்ததிலிருந்து 02-12-1990 உடலை விடும் வரை 33 வருடங்கள் அவருடைய மாணவனாக இருக்கும் பாக்கியம் பெற்றார்; நான் எனது குரு நாதருடன் இருக்கும் காலத்தில் ஸ்ரீ கண்ணைய யோகியார் எழுதிய யோகப்பாடங்கள் அனைத்து கையெழுத்துபிரதிகளை மீண்டும் கையெழுத்திப் பிரதிகளாக எழுதும் படி எனது குருநாதர் அவற்றை எனது சித்தத்தில் புகுத்தினார்.

எனது குரு நாதர் மாத்திரமே 33 வருடங்கள் அவரிடம் அனேக வித்தைகள் கற்றவர்; இவை அனைத்தையும் முறையாகத் தொகுத்து சாரம் குறையாமல் அந்த உயர் யோகியின் விளக்கங்களை மக்கள் மனதிற்கு கொண்டும் செல்லும் குருபணியை சிருஷ்டி அவருடைய பரிபூரண ஆசியுடன் ஆரம்பிக்கிறது.

ஸ்ரீ கண்ணைய யோகியரின் யோக கற்கை

____________________________________________________

இந்த குருபாரம்பரியம் தொடர சிருஷ்டி ஸ்ரீ கண்ணைய யோகியரின் ஆத்ம யோக ஞானப் பாடங்களை முறைப்படுத்திய கற்கையாக ஸ்ரீ ஸக்தி சுமனனின் விளக்கவுரை, அனுபவப் பயிற் சி ஆகியவற்றுடன் கற்பிக்க உள்ளது; ஸ்ரீ கண்ணைய யோகியரின் பாடங்கள் எல்லாம் நான் வாங்கிப் படித்திருக்கிறேன் என்பது குருமுகமாக பயில்கிறேன் என்பது வெவ்வேறானது. இந்தக் கற்கையின் நோக்கம் குருகுல அனுபவத்தை மாணவர்களுக்குத் தருவது.

என் மாணவன்

_______________________________

ஸ்ரீ கண்ணைய யோகியார் ஒருவன் தனது குருபரம்பரையில் ஆன்ம, யோக வித்தை கற்க எத்தகைய பண்பினைக் கொண்டிருக வேண்டும் என்பதை தனது கைப்பட எழுதிய குறிப்பு கீழே :

சித்தர் மரபில் மாணவனாக இருக்க வேண்டியவரின் பண்புகளை தன் கைப்பட எழுதி வைத்த குறிப்பு;

என் மாணவன்

நான் இன்ன சாதி என்று நினையாதவன்

மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்

ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்

கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்.

பண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன்.

எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்

தனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்

மாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக்கொடுக்காதவன்

வாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக் கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்

கண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்

எத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்

சமயச் சழக்கெனும் சேற்றிலிருந்து துணிகரமாக மீள முயற்சிப்பவன்

ரிஷி மரபின் உண்மைகளைத் தெரிந்து அதன் வழி நடப்பவன்

அவனே என் மாணவன்.

அவனுக்குத்தான் என்னில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக ரத்தினங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

– யோகி கண்ணையா –

You cannot copy content of this page