எனது குரு நாதர் அவரை 1957 இல் அம்பத்தூரில் சந்தித்ததிலிருந்து 02-12-1990 உடலை விடும் வரை 33 வருடங்கள் அவருடைய மாணவனாக இருக்கும் பாக்கியம் பெற்றார்; நான் எனது குரு நாதருடன் இருக்கும் காலத்தில் ஸ்ரீ கண்ணைய யோகியார் எழுதிய யோகப்பாடங்கள் அனைத்து கையெழுத்துபிரதிகளை மீண்டும் கையெழுத்திப் பிரதிகளாக எழுதும் படி எனது குருநாதர் அவற்றை எனது சித்தத்தில் புகுத்தினார்.
எனது குரு நாதர் மாத்திரமே 33 வருடங்கள் அவரிடம் அனேக வித்தைகள் கற்றவர்; இவை அனைத்தையும் முறையாகத் தொகுத்து சாரம் குறையாமல் அந்த உயர் யோகியின் விளக்கங்களை மக்கள் மனதிற்கு கொண்டும் செல்லும் குருபணியை சிருஷ்டி அவருடைய பரிபூரண ஆசியுடன் ஆரம்பிக்கிறது.
இந்த குருபாரம்பரியம் தொடர சிருஷ்டி ஸ்ரீ கண்ணைய யோகியரின் ஆத்ம யோக ஞானப் பாடங்களை முறைப்படுத்திய கற்கையாக ஸ்ரீ ஸக்தி சுமனனின் விளக்கவுரை, அனுபவப் பயிற் சி ஆகியவற்றுடன் கற்பிக்க உள்ளது; ஸ்ரீ கண்ணைய யோகியரின் பாடங்கள் எல்லாம் நான் வாங்கிப் படித்திருக்கிறேன் என்பது குருமுகமாக பயில்கிறேன் என்பது வெவ்வேறானது. இந்தக் கற்கையின் நோக்கம் குருகுல அனுபவத்தை மாணவர்களுக்குத் தருவது.
என் மாணவன்
_______________________________
ஸ்ரீ கண்ணைய யோகியார் ஒருவன் தனது குருபரம்பரையில் ஆன்ம, யோக வித்தை கற்க எத்தகைய பண்பினைக் கொண்டிருக வேண்டும் என்பதை தனது கைப்பட எழுதிய குறிப்பு கீழே :
சித்தர் மரபில் மாணவனாக இருக்க வேண்டியவரின் பண்புகளை தன் கைப்பட எழுதி வைத்த குறிப்பு;
என் மாணவன்
நான் இன்ன சாதி என்று நினையாதவன்
மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்
ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்
கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்.
பண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன்.
எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்
தனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்
மாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக்கொடுக்காதவன்
வாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக் கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்
கண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்
எத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்
பதஞ்சலி யோக சூத்திரம் கற்கும் ஆர்வமான மாணவர்கள் ஒன்று விளங்கிக்க கொள்ள வேண்டும். ஸமாதி பாதம் ஸாதனா பாதம் இரண்டையும் பதஞ்சலி மகரிஷி ஒரு ஒழுங்கில் எழுதி வைத்திருக்கிறார்.
முதலாவது ஸமாதி பாதத்தை படித்தவுடன் உங்களுக்கு அனைத்து சாதனை உத்திகளும் விளங்கினால் நீங்கள் முற்பிறப்பில் யோகத்தை தீவிரமாக பயிற்சி செய்து அப்பியாசத்திலும் வைராக்கியத்திலும் குறைவு இருந்ததால் சாதனையைப் பூர்த்தி செய்யவில்லை என்ற நோக்கம் கருதி உங்களுக்கு விளக்கம் தரப்படுகிறது.
இந்தப்பகுதி விளங்கவில்லை என்றால் அடுத்த பகுதி கிரியா யோகம் – இது மூன்று அங்கங்களை உடைய யோகம் – தபம், சுவாத்தியாயம், ஈஸ்வரப்ரணிதானம். இந்த வகை மாணவர்களும் ஒரளவு முன்னேறியவர்களே; ஆனால் கோட்பாட்டு அறிவு குறைவாகவும், தமது அகங்காரத்தை அர்ப்பணித்து ஸமாதி நிலை அடைய கஷ்டப்படுபவர்களும், தொடர்ச்சியான முயற்சியான தபம் இல்லாததால் ஸமாதி நிலை அடையக் கஷ்டப்படுபவர்களுக்குரிய வழி!
மூன்றாது நீங்கள் யோகம் பற்றி எந்த முன் அனுபவமும் இல்லை என்றால் அட்டாங்க யோகத்திலிருந்து தொடங்க வேண்டும்.
ஆகவே சாதனா பாதம் கற்றுத் தெளியும் வரை அமைதியாக பாடங்களைக் கவனியுங்கள்!
ஸ்ரீ அரவிந்தர் மனித உணர்வின் அகங்காரத்தின் – ஆணவத்தின் முட்டாள்தனத்தால் நாம் ஒவ்வொரு காரியத்தையும் செய்து இறுதியில் ஏன் தோல்வி அடைகிறோம் என்பதை இப்படிக் குறிப்பிடுகிறார்.
வாழ்க்கையின் பாடத்திலிருந்து ஒருவன் தெரிந்துகொள்ள வேண்டியது யாதெனில் இந்த பௌதீக உலகத்தின் ஒவ்வொன்றும் மனிதனை இறுதியில் தோற்கச் செய்கிறது. உண்மையில் தன்னை நோக்கி முழுமையாகத் திரும்பிய ஒருவனை இறைவன் ஒருபோதும் தோல்வியடையச் செய்வதில்லை, இதை உங்களிடம் தவறு இருப்பதால் ஏதோ உங்களை ஊதித் தள்ளிவிடுகிறது என்று நினைக்காதீர்கள்; உலகில் எந்த மனிதனும் நிலைத்து நிற்க முடியாது; அவன் வைக்கும் ஆசைகள் எதுவும் நீடித்து நிலைத்து நின்று பயன் தர முடியாது; அப்படி எதை அடைந்தாலும் அது கடைசியில் ஒரு தோல்வியை, விரக்தியைத் தான் தரும்; எவரும் வாழ்க்கையில் திருப்தியுற முடியாது!
ஆகவே எமது மனம், உடல், பிராணன் முதலிய கருவிகளை இறைவனை நோக்கித் திருப்புவது மாத்திரமே நாம் வாழ்க்கையில் செய்யக்கூடிய ஒரேயொரு உண்மையாகும்.
மனிதன் தான் விரும்பி அடையும் அனைத்தும் இறுதியில் தான் விரும்பியது போன்று இருப்பதில்லை என்பதால் எப்போதும் திருப்தி அடைவதில்லை! இதனால் வேறு ஒன்றை முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்.
அழகான பெண்ணைத் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையலாம் என்று நம்பி கஷ்டப்பட்டு திருமணம் செய்கிறான்; செய்த பிறகு அது உண்மையல்ல என்று மனம் வெதும்புகிறான்; பெரிய தொழிலில் நல்ல சம்பளம் என்று வேலைக்குச் சென்று பிறகு அது மன அழுத்தம் என்று புலம்புகிறான். இப்படி ஒவ்வொரு செயலும் இறுதியில் துன்பத்தைத் தருகிறது.
இதை வெல்வது எப்படி? இப்படி கற்பனையான ஆசைகளை வளர்த்துக்கொள்ளாமல், எமக்கு வாழ்க்கையில் அமையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது ஆசைகள், பேராசைகளை முதன்மைப் படுத்தி ஏமாறாமல் அதை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்கிறோம் என்ற கடமையுணர்வுடன் செய்யும் பண்பு எமக்கு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையைத் தரும்