அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
பாயிரம் · மந்திரம் 2

கடவுள் வாழ்த்து

ஒன்றில் தொடங்கி எட்டில் முடியும் பிரபஞ்ச உருவாக்கம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

இந்தப் பாடலில் மூலனார் மூன்று மறைபொருள் விஷயத்தை சுருக்கி வைத்துள்ளார்.

இந்தப் பாடல் ஒரு மூன்று அடுக்குகளைக் கொண்ட ரகசியப் பாதை:

  1. பிரபஞ்ச உருவாக்கம் (Cosmic Evolution)
  2. சாதகனின் அக யோகப் பயணம் (Inner Yogic Evolution)
  3. அறிவு ஞானம் (Total Realization)

ஒரு வரியில் பாடலின் விளக்கத்தைச் சொன்னால் அகண்ட ஒன்றான பரமசிவம் பல்வேறு வெளிப்பாடுகளாக வெளிப்பட்டு மறுபடியும் பூர்ண உணர்வாக திரும்புதலை எட்டு நிலைகளில் திருமூலனார் விளக்கியுள்ளார்.

இனிப் பாடலை திருமூலரை குருவாக எண்ணிப் படியுங்கள்:

பழந்தமிழ் வடிவ மூல மந்திரம்
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன்
ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான் உணர்ந் தெட்டே.
சந்தி பிரித்த வடிவம்
ஒன்று அவன் தானே
இரண்டு அவன் இன்னருள்
மூன்றினுள் நின்றான்
நான்கு உணர்ந்தான்
ஐந்து வென்றான்
ஆறில் விரிந்தான்
ஏழு உம்பர்ச் சென்றான்
எட்டில் உணர்ந்திருந்தான்.
யோக ஆகம தந்திர விளக்கவுரை

இப்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று ஏதோ திருமூலர் கணக்குச் சொல்கிறார், அந்தக் கணக்கு என்னவென்று பார்ப்போம்.

🔱 1. ஒன்று அவன் தானே

இது ஏகமான பரமசிவன் — நிர்குணம், நிராகாரம், ஆதியுமின்றி அந்தமுமின்றி இருக்கும் அத்வைத நிலை இங்கு இன்னும் சக்தி வெளிப்படவில்லை. "அவன் - பரசிவன்" மட்டும் — சுத்த சிவ நிலை.

🔱 2. இரண்டு அவன் இன்னருள்

ஒன்றாக இருந்த அவன் இன்னருள் வெளிப்படும் போது இரண்டாகிறான். குலார்ணவ தந்திரம்: "ஶிவ ஶக்தி யுக்தோ" — சக்தியுடன் சேர்ந்தாலே சிவன் செயல்படுவான். ஶக்தி செயல் பட வெளிப்படும் நிலை. இங்கு "இன்னருள்" = அனுக்ரஹ சக்தி. பிரபஞ்சம் உருவாகும் முதல் அலை வெளிப்பட்டுவிட்டது.

🔱 3. மூன்றினுள் நின்றான்

வெளிப்பட்ட அனுக்கிரஹ சக்தி மூன்று முக்கிய சக்திகளாக அதனுள் நின்று செயல் கொள்கிறார்.

  • இச்சா (Will)
  • ஞானம் (Knowledge)
  • கிரியா (Action)

"நின்றான்" = நிலைபெற்றான் என்பதன் மூலம் இந்த மூன்று சக்திகளுக்குள்ளும் அவன் - சிவன் நிற்பதால் படைப்பு இயக்கம் தொடங்குகிறது.

🔱 4. நான்கு உணர்ந்தான்

மூன்று சக்தியிற்குள் நின்று எப்படி உணர்கிறான்? சதுர் அவத்தைகள் மூலம்.

  • ஜாக்ரத் (விழிப்பு)
  • ஸ்வப்ன (கனவு)
  • சுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்)
  • துரியம் (அதீத நிலை)

ஒன்றாக இருந்து இரண்டாக இன்னருளை வெளிப்படுத்தி மூன்றாக நின்று நான்கா உணர்ந்தவன் இப்போது ஐந்தாக வென்றான்.

🔱 5. ஐந்து வென்றான்

ஐந்தாக என்பதை ஐந்தொழில்களாகவும், ஐம்பூதங்களாகவும் வெளிப்பட்டதாக உணரலாம்.

(A) பஞ்சகிருத்த்யம்:

  • சிருஷ்டி (Creation)
  • ஸ்திதி (Preservation)
  • சம்ஹாரம் (Dissolution)
  • திரோபாவம் (Concealment)
  • அனுக்ரஹம் (Grace)

(B) பஞ்சபூதங்கள்:

  • நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம்

"வென்றான்" என்றால் இவற்றை எல்லாம் கடந்தவன். இந்த ஐந்துவரை பிரபஞ்சத்தின் செயலை விளக்கிய திருமூலர் எப்படி சிவன் உடலிற்குள் பரிணமிக்கிறான் என்ற உண்மையை அடுத்த வரியில் சொல்கிறார்.

🔱 6. ஆறில் விரிந்தான்

உடலிற்குள் சிவன் ஆறு சக்கரங்களுக்குள் விரிந்து:

  • மூலாதாரம்
  • ஸ்வாதிஷ்டானம்
  • மணிபூரகம்
  • அனாஹதம்
  • விஷுத்தி
  • ஆஜ்ஞா

என சக்தி இவற்றில் விரிகிறது. "விரிந்தான்" என்றால் சிவனின் சக்தி மனித உடலிற்குள் பரவும் முறை ஆறாக இருக்கிறது என்று கூறுகிறார். இப்படி ஆறாக விரிந்த சக்தி மீண்டும் எப்படி ஒடுங்குகிறது என்ற இரகசியத்தை அடுத்த வரியில் கூறுகிறார்.

🔱 7. ஏழு உம்பர்ச் சென்றான்

உடலிற்குள் ஆறாக விரிந்த சக்தி மீண்டும் உயர்வு பெற்று தேவ நிலை பெற அது ஏழாக மேலே செல்ல வேண்டும்.

ஏழு உலகங்கள்:

  • பூ, புவ, சுவ, மக, ஜன, தபோ, சத்ய என்ற நிலைகளில்.

"உம்பர் சென்றான்" என்றால் மீண்டும் ஜீவனாக ஆறாக விரிந்த சீவன் சிவமாக மேலான சுத்த நிலைகளில் எழுச்சி பெறும் நிலை ஏழு. இந்த ஏழு நிலை எழுச்சியை எப்படி உணர்வது?

🔱 8. எட்டில் உணர்ந்திருந்தான்

அஷ்ட மூர்த்த வடிவங்களினூடாக யோகத்த்தில் உணரும் நிலை

  1. பூமி
  2. நீர்
  3. தீ
  4. காற்று
  5. ஆகாசம்
  6. சூரியன்
  7. சந்திரன்
  8. ஜீவன்

ஜீவனைத் துணைகொண்டு சூரிய சந்திர நாடிகளை இயக்கி பஞ்ச பூதங்களை பேதித்தல் மீண்டும் பரசிவ நிலையை அனுபவத்தில் உணரலாம் என்று திருமூலம் முதல் பாடலிலேயே மற்றைய மூவாயிரம் பாடலும் எதற்காக என்ற உண்மையை விளக்கி விடுகிறார்.

திருமூலர் இந்தப் பாடலில் கூறும் பிரபஞ்ச உருவாக்கம் என்பது, ஆதியில் ஒரே பரமசிவம் (ஒன்று) தன்னுள் சக்தியாக இரண்டாக வெளிப்பட்டு, இச்சா–ஞான–கிரியா எனும் மூன்று சக்திகளால் படைப்பின் இயக்கத்தைத் தொடங்கி, அதன் பின்னர் சித்தத்தின் நான்கு நிலைகளையும் உருவாக்கி அனுபவத்தை அமைத்து, பஞ்சபூதங்களாக உலகத்தை வெளிப்படுத்தி, அந்த சக்தி ஆறு சக்கரங்களாக உயிர்களில் விரிந்து, ஏழு உலகங்களாக உயர்ந்த நிலைகளில் பரவி, இறுதியில் அஷ்டமூர்த்தி வடிவில் அனைத்திலும் தன்னை உணர்ந்து நிற்கும் முழுமையான பிரபஞ்சமாக வெளிப்படுகிறது;

அதாவது, ஒரே சுத்த சிவம் பல்வேறு நிலைகளாக விரிந்து, மீண்டும் அனைத்திலும் தன்னை அறிந்து நிற்கும் சிவ-சக்தி விளையாட்டே இந்தப் பிரபஞ்ச உருவாக்கமாகும்.

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை
இரண்டாம் மந்திரம்: ஆன்ம பரிணாமச் சுழற்சி பாவனை

சிரசில் திருமூலரை குருவாக இருத்தி, அகத்திய மாமகரிஷியின் ஊர்த்துவ முக ஆற்றலால் தூண்டப்பட்ட ஒரு சிரத்தையுள்ள மாணவனாக பின்வரும் பாவனைகளுடன் எழுதத் தொடங்குங்கள்:

1. "ஒன்று அவன் தானே" (சுத்த சிவ நிலை)

பாவனை: இன்னும் பிரபஞ்சம் உருவாகாத, சக்தியும் வெளிப்படாத ஆதியுமின்றி அந்தமுமின்றி இருக்கும் அத்வைத நிலையை நினைவுகூருங்கள்.

உணர்வு: நீங்கள் எழுதும் காகிதத்தின் வெண்மையைப் போல, எவ்வித அசைவுமற்ற சுத்த சிவமாக உங்களை உணர்ந்து எழுதுங்கள்.

2. "இரண்டு அவன் இன்னருள்" (சக்தி வெளிப்பாடு)

பாவனை: ஒன்றாயிருந்த சிவம், பிரபஞ்சத்தை உருவாக்க 'அனுக்ரஹ சக்தியாக' (இன்னருள்) இரண்டாகப் பிரிவதைக் காட்சிப்படுத்துங்கள்.

உணர்வு: "சிவன் சக்தியோடு சேர்ந்தே செயல்படுகிறான்" என்ற உண்மையை உணர்ந்து, உங்கள் எழுதும் ஆற்றலே அந்தச் சக்தியின் வெளிப்பாடு என எண்ணுங்கள்.

3. "மூன்றினுள் நின்றான்" (இச்சா-ஞான-கிரியா)

பாவனை: வெளிப்பட்ட சக்தி, இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்று ஆற்றல்களாகப் படைப்பை இயக்குவதைக் கருதுங்கள்.

உணர்வு: சிவமே இந்த மூன்று சக்திகளுக்குள்ளும் மறைந்து நின்று செயல்படுவதாகப் பாவனை செய்து எழுதுங்கள்.

4. "நான்கு உணர்ந்தான்" (சதுர் அவத்தைகள்)

பாவனை: ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), சுஷுப்தி (உறக்கம்), துரியம் ஆகிய நான்கு நிலைகளாக இறைவன் விரிந்து உணர்வதை எண்ணுங்கள்.

உணர்வு: உங்கள் உள்ளுணர்வு இந்த நான்கு நிலைகளையும் கடந்து தெளிவடைவதாகப் பாவனை செய்யுங்கள்.

5. "ஐந்து வென்றான்" (பஞ்சகிருத்தியம் & பஞ்சபூதங்கள்)

பாவனை: சிருஷ்டி முதல் அனுக்ரஹம் வரையிலான ஐந்தொழில்களையும், நிலம் முதல் ஆகாயம் வரையிலான ஐம்பூதங்களையும் இறைவன் கடந்து நிற்பதைக் காட்சிப்படுத்துங்கள்.

உணர்வு: ஐம்பூதங்களை வென்ற அந்தப் பேரொளியை உங்கள் மூலாதாரத்தில் நிலைநிறுத்தி எழுதுங்கள்.

6. "ஆறில் விரிந்தான்" (ஆறு ஆதாரச் சக்கரங்கள்)

பாவனை: பிரபஞ்சத்தில் விரிந்த சக்தி, இப்போது உங்கள் உடலிற்குள் மூலாதாரம் முதல் ஆக்ஞா வரை ஆறு சக்கரங்களாகப் பரவி நிற்பதை உணருங்கள்.

உணர்வு: உங்கள் உடலில் ஆறு ஆதாரங்கள் ஒரு 'திருமந்திர அரண்மனையாக' விரிவடைவதை ஆழமாகப் பாவனை செய்யுங்கள்.

7. "ஏழு உம்பர்ச் சென்றான்" (எழுச்சி நிலை)

பாவனை: ஆறாக விரிந்த சக்தி மீண்டும் மேலான நிலைகளை நோக்கி (பூ முதல் சத்ய லோகம் வரை) உயர்வு பெறுவதாகக் காட்சிப்படுத்துங்கள்.

உணர்வு: உங்கள் பிராண சக்தி கீழிருந்து மேல்நோக்கி (Urdhva Mukha) எழும்பி, தேவாதி தேவனைக் காணச் செல்வதாகப் பாவனை செய்து எழுதுங்கள்.

8. "எட்டில் உணர்ந்திருந்தான்" (அஷ்டமூர்த்தி & பூரண உணர்வு)

பாவனை: பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன் மற்றும் ஜீவன் ஆகிய எட்டும் இணைந்த அஷ்டமூர்த்தி வடிவமாக இறைவன் அனைத்திலும் தன்னை உணர்ந்து நிற்பதைக் காணுங்கள்.

உணர்வு: இறுதியில் சீவன் சிவமாகி, பிரிந்த ஆன்மா மீண்டும் பரசிவத்தோடு கலந்து, பூரண உணர்வாக (Total Realization) நிலைபெறுவதை உணர்ந்து இந்த மந்திரத்தை நிறைவு செய்யுங்கள்.

🔱 சாதனைப் பயன்

இந்த எட்டு நிலைப் பாவனையுடன் நீங்கள் எழுதும் போது, உங்கள் 'திருமந்திர அரண்மனை'யின் அடித்தளம் பிரபஞ்சத்தின் முழுமையான வரைபடமாக (Cosmic Map) மாறுகிறது. இதுவே திருமூலர் சொல்லும் "அகண்ட ஒன்றான பரமசிவம் பல்வேறு வெளிப்பாடுகளாக வெளிப்பட்டு மீண்டும் பூர்ண உணர்வாகத் திரும்புதல்" என்ற ரகசியப் பாதையாகும்.

இப்போது இந்தப் பூரண உணர்வுடன் உங்கள் சாதனையைத் தொடருங்கள்!