அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
பாயிரம் · மந்திரம் 3

மரணத்தை வெல்லும் மந்திர யோகப் பாவனை

சீவனைச் சிவமாக்கும் ரகசியமும் எமனை வெல்லும் வழியும்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

இனி திருமூலரின் மூன்றாவது மந்திரம்

மூல மந்திரம்
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

இதை சந்தி பிரித்தால்

போற்றி இசைத்து
இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கு உம் நல்ல மாதுக்கும் நாதனை
மேல் திசைக்கு உள் தென் திசைக்கு ஒரு வேந்தன் ஆம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே

இந்த இரண்டாது மந்திரம்வெளிப்படையாகப் பார்க்கும்போது ஒரு சாதாரண சிவஸ்துதி போலத் தோன்றலாம்; ஆனால் அதன் சொற்கள் ஒவ்வொன்றும் தந்திர ஆகம மரபில் மறைந்திருக்கும் ஆழ்ந்த யோக ரகசியங்களையும், மனிதனின் உள் சக்தி எழுச்சியையும், பிரபஞ்ச உருவாக்கத்தின் மர்மப் பாதையையும் சுட்டிக் காட்டுகின்றன. “திசை”, “மாது”, “கூற்று” போன்ற எளிய சொற்களின் பின்னால் மறைந்திருப்பது மந்திரம், பிராணன், சக்தி, மரணத்தை வெல்லும் அறிவு போன்ற உயர்ந்த தத்துவங்களே என்பதை உணரும்போது, இந்தப் பாடல் ஒரு பாடலாக இல்லாமல், சாதகரை உள்ளார்ந்த உணர்வின் உச்சிக்குக் கொண்டு செல்லும் ஒரு மந்திரக் கதவாக வெளிப்படுகிறது.

இனி ஒவ்வொரு வரியாக அர்த்தத்தைப் பார்ப்போம்;

“போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை

இந்த வரி உண்மையில் ஒரு சாதனை சூத்திரம்:

  • மந்திரம் ஜபிக்க
  • பிராணத்தை ஒழுங்குபடுத்த
  • சித்தத்தை நிலைநிறுத்த
  • உள்ளிருக்கும் சிவத்தை உணர

என்ற ஒழுங்கை விளக்குகிறது. இதன் மூல அர்த்தம் : “புகழ்ந்து பாடப்படும், இனிய உயிர்களில் நிலைபெற்றிருக்கும் பரிசுத்தமானவன்”

திருமந்திரத்தின் அடிப்படைக் கோட்பாடு: 👉 பதி – பசு – பாசம்

இதில்:

  • “உயிர்” என்றால் → பசு (ஜீவன்)
  • “மன்னும்” என்றால் → உள்ளே இருப்பவன்
  • “புனிதன்” என்றால் → பதி (சிவன்)

📌 ஆக: “சிவன் உயிர்களில் உள்ளே இருப்பவன்”

சைவ ஆகமங்கள் கூறும் உண்மை சிவன் சீவனின் உள்ளே உறைபவன் - அந்தர்யாமி! 👉 அதாவது: சிவன் கோயிலில் மட்டும் அல்ல உயிரின் உள்ளே சித்தத்தில் உறைகிறான். 📌 ஆக: “உயிர் மன்னும் புனிதன்” = அந்தர்யாமியான சிவன்

இப்போது முக்கியமான பகுதி: 👉 “இசைத்து” என்றால் சாதாரணமாக பாடுதல்

ஆனால்: திருமந்திரத்தில் “இசைத்தல்” என்றால்: மந்திரம், நாதம். 📌 ஏன்? ஏனெனில்: முழு நூலும் யோக–மந்திர–தந்திர நூல் சாதாரண பக்தி நூல் மட்டும் அல்ல 👉 ஆக: “இசைத்து” என்பது → மந்திர உச்சாரணம்

தந்திரத்தின் அடிப்படை சூத்திரம்: மந்திரம் + பிராணன் = சித்தி

இப்போது வரியை மீண்டும் பாருங்கள்: போற்றி இசைத்து → மந்திர ஒலி, உயிர் → பிராண சக்தி, மன்னும் → நிலைபெறுதல். 📌 ஆக தர்க்க ரீதியாக: மந்திர ஒலியாக, நாதமாக சிவன் உயிரில் நிலைபெற்றுள்ளார் என்ற இரகசியம் விளக்கப்பட்டுள்ளது.

அடுத்த வரிகள் சதாசிவ மூர்த்தத்தின் பஞ்ச வக்த்ரங்களைச் சொல்வதிலிருந்தும், அங்கிருதே மந்திரங்கள் அனைத்தும் கிளைத்தது என்பதை ஆகமங்கள் உறுதிப்படுத்துவதைக் கொண்டும் இதை மேலும் உறுதி செய்துகொள்ளலாம்!

அடுத்த வரி

நால் திசைக்கு உம் நல்ல மாதுக்கும் நாதனை மேல் திசைக்கு

இந்த வரி முழுவது மந்திரங்கள் வெளிப்பட்ட நிலைகளைச் சொல்லும்

நால் திசை என்பது கிழக்கு (தற்புருடம்), மேற்கு (சத்யோஜாதம்), வடக்கு (வாமதேவம்), தெற்கு (அகோரம்) இவற்றையும் மேல் திசை என்பது ஊர்த்துவ முகமான ஈசான முகத்தையும் குறிக்கும்! இங்கிருந்து வெளிப்பட்ட அனைத்து மந்திரங்களும் சக்தி வடிவானவை. அனைத்து மந்திரங்களும் சிவனில் இருந்து வெளிப்பட்ட சக்தியான மாது, அதற்கு நாதன் சிவனே! எல்லா மந்திரங்களுக்கும் நாதன் சிவனே! ஆனால் மந்திரங்கள் அனைத்து சக்தி ரூபமானவை!

அடுத்த வரி இன்னும் இரகசியமான ஒன்று

தென் திசைக்கு ஒரு வேந்தன் ஆம் கூற்று

தென் திசைக்கு ஒரு வேந்தனாக இருப்பவன் யமன் அவனை உதைத்தானை யான் கூறுகிறேன் என் கிறார் திருமூலர். அதாவது தென் திசை அரசனாக யமனை உதைத்த அந்த மரணமில்லாத பெருவாழ்வு தரக்கூடியவனைப் பற்றி நான் இந்த திருமந்திரத்தில் கூறுகிறேன் என்று சொல்கிறார். எப்பேர்பட்ட இரகசியத்தை இங்கே உரைக்கிறார்;

ஆக இந்தப் பாடலில் திருமூலர் சொல்கிறார்; நான் இந்த திருமந்திரத்தில் உயிரின் உள்ளே அந்தர்யாமியாக நாதமாக சீவனில் உறையும் சிவனை உணரும் வழியை ஐந்து முகங்களிலிருந்தும் வெளிப்பட்ட மாதுவான மந்திர சக்தியின் ஆற்றலால், யமனை உதைத்து மரணத்தை வென்றி சீவன் சிவனாகும் இரகசியத்தை இங்கே யான் உரைக்கப்போகிறேன் என்பதாம்!

இதனாலேயே இங்கேயுள்ள பாடல்கள் எல்லாம் மந்திரம் என்று சொல்லப்படுகிறது.

இந்த விளக்கம் உங்களில் புதியதொரு உற்சாகத்தை உருவாக்கியதா? சீவனைச் சிவமாக்க மந்திர சாதனை எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதா இருக்கிறதா? இந்தப் பதிவை வாசித்த போது ஏற்பட்ட உங்கள் உணர்வுகளைக் கீழே பதியுங்கள்!

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை
*மூன்றாம் மந்திரம்: மரணத்தை வெல்லும் மந்திர யோகப் பாவனை*

சிரசில் திருமூலரை குருவாக இருத்தி, அகத்திய மாமகரிஷியின் ஊர்த்துவ முக ஆற்றலைச் சிந்தித்தபடி, பின்வரும் படிநிலைகளில் பாவனை செய்து எழுதுங்கள்:

1. "போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை"

பாவனை: 'இசைத்து' என்பது வெறும் பாடலல்ல, அது உங்கள் உள்ளே ஒலிக்கும் நாதம் அல்லது மந்திர ஒலி.

உணர்வு: உங்கள் உயிரின் உள்ளே (பசு), அந்தர்யாமியாக உறைந்திருக்கும் புனிதமான சிவனை (பதி), மந்திர ஒலியின் துணைகொண்டு உணர்வதாகப் பாவனை செய்யுங்கள்.

சாதனை: மந்திரம் + பிராணன் = சித்தி என்ற சூத்திரப்படி, நீங்கள் எழுதும் ஒவ்வொரு சொல்லும் உங்கள் பிராண சக்தியை நிலைபெறச் செய்வதாக எண்ணுங்கள்.

2. "நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை மேற்றிசைக்கு உள்"

பாவனை: சிவனின் ஐந்து முகங்களான தற்புருடம் (கிழக்கு), சத்யோஜாதம் (மேற்கு), வாமதேவம் (வடக்கு), அகோரம் (தெற்கு) மற்றும் ஈசானம் (மேல் திசை) ஆகியவற்றை உங்கள் அகக்கண்ணில் தரிசியுங்கள்.

உணர்வு: இந்த ஐந்து முகங்களிலிருந்தும் வெளிப்பட்ட சக்தி வடிவமான (மாது) அனைத்து மந்திரங்களுக்கும் சிவமே நாதன் என்பதை உணர்ந்து எழுதுங்கள்.

சாதனை: அனைத்து மந்திர சக்திகளும் உங்கள் குருவான திருமூலரின் வழியாக உங்களுக்குள் இறங்குவதாகப் பாவனை செய்யுங்கள்.

3. "தென் திசைக்கு ஒரு வேந்தனாம் கூற்றுதைத்தானை"

பாவனை: தென் திசைக்கு அரசனான எமனை (காலனை), தனது திருவடியால் உதைத்துத் தள்ளிய சிவபெருமானின் வீரச்செயலைக் காட்சிப்படுத்துங்கள்.

உணர்வு: காலனை வென்ற அந்த மரணமில்லாப் பெருவாழ்வு, இந்தத் திருமந்திரச் சாதனையின் மூலம் உங்களுக்கும் கைகூடுவதாகப் பாவனை செய்யுங்கள்.

4. "யான் கூறுகின்றேனே"

பாவனை: "சீவனைச் சிவமாக்கும் ரகசியத்தை நான் இப்போது உரைக்கிறேன்" என திருமூலர் உங்கள் செவிகளில் ரகசியமாக உபதேசிப்பதாக எண்ணுங்கள்.

உணர்வு: இந்தத் திருமந்திர அரண்மனைச் சாதனை, உங்களை மரண பயத்திலிருந்து விடுவித்து, ஞானத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் ஒரு 'மந்திரக் கதவு' என்ற உறுதியுடன் எழுதி நிறைவு செய்யுங்கள்.